விடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு

Posted: May 20, 2009 in LTTE
Tags: , ,

இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை.

சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடு.

1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை.

நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர்.

இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை?
                                                                                                                                                                     இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர்.


பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார்.

இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது.

                                                                        இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார்.

ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.. 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.

கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது.

1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்.

1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள்.

1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது..

அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர்.

இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன..

புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது.

இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது.

இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது.

இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர்.

2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது.

அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார்.

விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின.

புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர்..

4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது.

பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள்..

நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மாலை மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s